சிவமோகா: 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சிவமோகா விமான நிலையத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். கர்நாடகா மாநில சட்ட சபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி கர்நாடகா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களில் நான்காவது முறையாக பிரதமர் மோடி இன்று கர்நாடகா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சிறப்பு ராணுவ விமானத்தில் சிவமோகாவிற்கு பிரதமர் மோடிக்கு வந்தார். சிவமோகா வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து சிவமோகாவில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்ட புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 3 ஆயிரத்து 200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளத்துடன் கூடிய நவீன வசதி கொண்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஒரு மணி நேரத்தில் 300 பயணிகளை கையாளும் வகையிலும், இரவிலும் விமானங்கள் தரையிறங்க ஏதுவாகவும் விமான நிலையம் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூருவுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 2-வது பெரிய விமான நிலைய சிவமோக விமான நிலைய தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இன்று தனது 80வது பிறந்த நாளை கொண்டாடும் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவும் இந்த விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து சிவமோகா - ஷிகாரிபுரா மற்றும் ரனேபென்பூர் ஆகிய வழித்தடங்களுக்கான புதிய ரயில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெலகவி செல்லும் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைக்கிறார்.
அங்கு 990 கோடி ரூபாய் மதிப்பிலான பெங்களூர் - மும்பை ரயில்வே தண்டவாள கட்டுமான பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். மேலும் ஷிகரிபுரா டவுனுக்கு புதிய பைபாஸ் சாலை உள்பட, 215 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) திடத்தின் கீழ் 16 ஆயிரம் கோடி ரூபாய் 13வது தவணை தொகையை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
இதையும் படிங்க:சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக லட்சுமி நாராயணன் பதவியேற்பு!