டெல்லி:வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் (Michaung) புயலால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, சென்னையின் முக்கிய பகுதிகள் மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளிலும் நீர் சூழ்ந்தது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக பல இடங்களிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டு இருந்ததால், மக்கள் உதவிக்காக தொடர்பு கொள்ள முடியாமலும் தவித்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முதல் சென்னையில் ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் சீரடைந்தது.