டெல்லி: தடுப்பூசி வீணாவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அப்போது தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகளின் பல்வேறு விவரங்கள் குறித்து அலுவலர்கள் விரிவாக அவருக்கு விளக்கினர்.
தற்போதைய தடுப்பு மருந்து இருப்பு குறித்தும், அதை அதிகரிக்கச் செய்வதற்கான திட்டம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதற்காக தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுக்கு உதவ எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் பிரதமம் நரேந்திர மோடியிடம் விளக்கப்பட்டது. தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுடன் இணைந்து துடிப்புடன் பணியாற்றி வரும் இந்திய அரசு, அதிக உற்பத்தி மையங்கள், நிதியுதவி மற்றும் மூலப்பொருள்களின் விநியோகம் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு உதவி வருகிறது.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர், 18-44 வயது பிரிவினருக்கான தடுப்பு மருந்து வழங்குதல் குறித்து பிரதமர் இந்நிகழ்வின்போது ஆய்வு செய்தார். பல மாநிலங்களில் தடுப்பு மருந்து வீணாவது குறித்து ஆய்வு செய்த பிரதமர், அதிக அளவில் தடுப்பு மருந்து வீணாவதைத் தடுக்க வேண்டும் என்றும், இதனைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.