பெங்களூரு:நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி கடந்த 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வை தொடங்கியுள்ளது. சந்திரயான்-3 விண்கலம், இதுவரை யாரும் தொட்டிடாத நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை ஒட்டுமொத்த நாடும் உற்சாகமாக கொண்டாடி வருகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்திய அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று சந்திரயான்-3 திட்டத்தின் விஞ்ஞானிகள் குழுவிற்கு வாழ்த்துக் கூறினர். இஸ்ரோ தலைவர் சோமநாத், சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், உதவி திட்ட இயக்குனர் கல்பனா உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் பாராட்டு தெரிவித்தனர்.