டெல்லி:ஆண்டுதோறும் ஏப்.24ஆம் தேதி 'தேசிய பஞ்சாயத்து ராஜ்' தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி பஞ்சாயத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.24) ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார். மேலும், அங்கிருந்தவாறே நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளுடன் உரையாற்றுகிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக ஜம்மு யூனியன் பிரதேசத்துக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
'அம்ரித் சரோவர்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நாட்டில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காகவும், புனரமைப்பதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மேலும், 3,100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பனிஹால் -காசிகுண்ட் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.