தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை" - பிரதமர் மோடி! - டெல்லி தெளசா லால்சோட் விரைவுச்சாலை

காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும், காங்கிரஸின் அறிவிப்புகளும் திட்டங்களும் காகிதத்தில் மட்டுமே உள்ளதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Prime
Prime

By

Published : Feb 12, 2023, 8:21 PM IST

தௌசா(ராஜஸ்தான்): இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலையான டெல்லி - மும்பை விரைவுச்சாலை 1,386 கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லி - தெளசா - லால்சோட் வரை 246 கிலோ மீட்டர் நீளத்துக்கு 12,150 கோடி ரூபாய் செலவில் விரைவுச்சாலையாக அமைக்கப்பட்டது.

இச்சாலையின் திறப்பு விழா இன்று(பிப்.12) ராஜஸ்தான் மாநிலம் தெளசா நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, டெல்லி - தெளசா - லால்சோட் விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் விகே சிங், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தௌசா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய மோடி ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். பிரதமர் மோடி பேசுகையில், "காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொலைநோக்குடன் காங்கிரஸ் செயல்படவில்லை. காங்கிரஸின் அறிவிப்புகளும் திட்டங்களும் காகிதத்தில் மட்டுமே உள்ளன.

இதுவே பாஜக ஆட்சி அமைத்திருந்தால் ராஜஸ்தானில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். எல்லையோரங்களில் உள்ள கிராமங்களில் காங்கிரஸ் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் எப்போதும் நமது ராணுவ வீரர்களின் வீரத்தையும் போர்த்திறனையும் குறைத்து மதிப்பிடுகிறது. எல்லையில் எதிரிகளை எப்படி கையாள்வது என்று நம் வீரர்களுக்குத் தெரியும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இன்று திறக்கப்பட்ட டெல்லி - தெளசா - லால்சோட் விரைவுச்சாலை டெல்லி - ஜெய்ப்பூர் இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும். இதனால் ராஜஸ்தானில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இச்சாலை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே போன்ற துறைகளில் புதிய திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

விரைவுச்சாலையைச் சுற்றி கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில் சிறு வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் தங்களது பொருட்களை விற்கலாம். சுற்றுலாவுக்கு பேர் போன ராஜஸ்தானில் இந்த விரைவுச்சாலையால் சுற்றுலா மீதான ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும்.

தற்போது ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்திற்கு நிலையான வளர்ச்சியைச் சார்ந்த அரசு தேவை. ராஜஸ்தானில் மாநிலத்தின் கலாசாரம், பெருமை காப்பாற்றப்பட வேண்டுமானால் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவின் வலிமையான தூணாக ராஜஸ்தானை பாஜக மாற்றும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜார்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details