டெல்லி:அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்து உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட உலோகத்தால் ஆன சாமி சிலைகள் திருடு போயின. இதுதொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த 2020-ம் ஆண்டு இந்த சிலை திருட்டு வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் செந்துறை வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து காணாமல் போன ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டதும், அங்கிருந்து ஏலம் விடப்பட்டதும் தெரியவந்தது.
அந்த ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதையும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டு பிடித்தனர். வரதராஜ பெருமாள் கோயில் ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தையும், கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தையும் தொல்லியல் துறை நிபுணர்களின் உதவியோடு ஒப்பீடு செய்த போது 2 புகைப்படங்களில் இருந்ததும் ஒரே சிலை தான் என கண்டறியப்பட்டது.
இதையடுத்து காணாமல் போன வரதராஜ பெருமாள் கோயில் ஆஞ்சநேயர் சிலையை மீட்பது குறித்து தமிழக உள்துறை அமைச்சகத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆஞ்சநேயர் சிலை ஏலம் எடுத்த ஆஸ்திரேலிய நாட்டவரை தொடர்பு கொண்ட அதிகாரிகள் சிலை குறித்த தகவல்களை தெரிவித்தனர்.