டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் ஐந்து நாட்கள் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று (செப். 18) தொடங்கியது. முதல் நாள் கூட்டம் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற நிலையில், இன்று (செப். 19) இரண்டாவது நாள் சிறப்பு கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது.
முன்னதாக பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பாக அனைத்து கட்சி எம்பிக்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் நுழைந்து அவரவருக்கு உள்ள இருக்கையில் அமர்ந்தனர். தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி, உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் உரையில், “பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்தியா தயாராகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் காலடி எடுத்த வைத்த உடன் விநாயகர் அனைத்து தடைகளையும் நீக்குவார்” என்று தெரிவித்தார்.
மேலும், “புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வந்த இந்த நாள் (செப்.19) ஒரு புதிய தொடக்கத்தைக் காட்டுகிறது. இன்றைய உரை பெண்களை மையமாகக் கொண்டுள்ளது. சமுதாயத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் மகளிர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், சில காரணங்களால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. இந்த சந்தர்பத்தை அளித்த கடவுளுக்கு நன்றி. அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது” என கூறினார்.