பாலசோர் :ஒடிசா ரயில்கள் விபத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உள்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது, இந்த கோர விபத்தில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்த பிரதமர் மோடி விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள், விபத்துக்கான காரணம், சீரமைப்பு பணிகள், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் மற்றும் துரித நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். மேலும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மத்திய மற்றும் மாநில மீட்புக் குழுவினருடன் பேசிய பிரதமர் மோடி மீட்பு பணியில் ஏற்பட்ட சவால்கள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து ரயில்கள் விபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு அமைச்சரவை செயலாளர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா உள்ளிடோரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.