டெல்லி : மன் கி பாத் நிகழ்ச்சி மக்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும் நன்மையை வழங்கும் தனித்துவமான திருவிழாவாக மாறி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையான மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் என்ற மைல்கல்லை எட்டி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் முதல்முறையாக அக்டோபர் 3ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதன்பின், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 100வது எபிசோட் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் ஒலிபரப்பப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது பகுதியை லட்சக்கணக்கான மக்கள் கேட்டனர்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திலும் மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் ஒலிபரப்பப்படுகிறது. இந்நிலையில் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மதம் விஜயதசமி தினத்தன்று மன் கி பாத் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டு மக்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும் நன்மையை வழங்கும் தனித்துவமான திருவிழாவாக அமைந்ததாக கூறினார். மன் கி பாத் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திருவிழாவாக மாறியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.