டோகியோ : ஜி7 அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜப்பான் சென்று உள்ளார். ஹிரோசிமா நகரில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 என்னும் கூட்டமைப்பை உருவாக்கி ஆலோசனை நடத்தி வருகின்றன. நடப்பாண்டுக்கான ஜி7 மாநாட்டை நடத்தும் அங்கீகாரத்தை ஜப்பான் பெற்றது.
ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொள்கின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்று உள்ளார். இந்த மாநாட்டில் உலகளாவிய பிரச்சினைகளான உரம், உணவு, எரிசக்தி, பாதுகாப்பு, உக்ரைன் - ரஷ்யா போர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.
இதனிடையே, ஹிரோசிமா நகரில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், ஹிரோஷிமாவில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தி சிலை திறந்து வைக்க, எனக்கு வாய்ப்பளித்த ஜப்பானிய அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அதுவே மகாத்மா காந்திக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். உலகமே இன்று பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், ஹிரோஷிமா என்ற வார்த்தையைக் கேட்டாலே உலகமே பயந்து போகிறது என்றார்.
ஜப்பானிய பிரதமருக்கு தான் பரிசாக அளித்த போதி மரம் ஹிரோஷிமாவில் நடப்பட்டது என்பதை அறிந்து கொண்டது தனக்கு ஒரு சிறந்த தருணம் என்றும் அதனால் மக்கள் இங்கு வரும்போது அமைதியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்றார். மகாத்மா காந்தியின் சிலை அகிம்சை சிந்தனையை பிரதிபலிக்கும் என்று அவருக்கு தனது மரியாதையை செலுத்திக் கொள்வதாக பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதனிடையே, தென் கொரிய அதிபர் யூன் சுக் யியொலை (Yoon Suk Yeol) சந்தித்த பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், இந்தியா - தென் கொரியா இடையிலான வர்த்தகம், விஞ்ஞானம், சைபர் பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்து ஆலோசித்ததாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க :கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பு.. விழாக் கோலம் பூண்ட ஆளுநர் மாளிகை!