ஹிரோசிமா : உலகின் தற்போதைய நிலையை மாற்றும் ஒரு தலைபட்சமான முடிவுகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். ஜப்பான் சென்று உள்ள பிரதமர் மோடி, அணுஆயுத நகரான ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது, "உக்ரைனில் நிலவும் தற்போதைய சூழல் மனிதநேயம் மற்றும் மனிதாபிமான எண்ணங்களுக்கு எதிரான பிரச்னையே தவிர, அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கானது இல்லை’’ என்று கூறினார். இரு தரப்பு பேச்சுவார்த்தையே போர் நிறுத்தம் மற்றும் அமைதியான சூழல் உருவாவதற்கான ஒரே வழி என்று பிரதமர் மோடி கூறினார்.
உலக நாடுகள், ஐ.நா.வின் சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளித்து, தற்போதைய சூழலை மாற்றும் ஒரு தலைபட்சமான முடிவுகளுக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து பிராந்திய ஒருமைப்பாடு குறித்து பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மற்றும் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் ஊடுருவல்கள் குறித்து தெரிவித்தார். தொடர்ந்து ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, உக்ரைனில் நிலவும் தற்போதைய சூழலை அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்ததாக கருதவில்லை என்றும், மனிதநேயம் மற்றும் மனிதாபிமான மதிப்புகளுக்கு எதிரான பிரச்னை என்று நம்புவதாக கூறினார்.