டெல்லி :நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நேற்று (செப். 18) தொடங்கியது. 5 நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். தொடர்ந்து தமிழக எம்.பி. டி.ஆர் பாலு, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோர் விவாதம் நடத்தினர். இந்நிலையில், நேற்று (செப். 18) மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.