தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான வர்த்தக விலை உச்ச வரம்பு நிர்ணயம் - மத்திய அரசு! - மத்திய அரசு

கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க, மாற்றியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட (எம்ஆர்பி) ஆக்சிஜன் செறிவூட்டிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா என்பதை மாநில மருந்து விலை கட்டுப்பாட்டாளர்கள் கண்காணிக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

oxygen concentrators
வர்த்தக விலை உச்ச வரம்பு நிர்ணயம்

By

Published : Jun 4, 2021, 3:55 PM IST

புதுடெல்லி:ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான வர்த்தக விலை உச்ச வரம்பு நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக எழுந்த அசாதாரண சூழலை முன்னிட்டு, ஆக்சிஜன் செறிவூட்டிகளின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில் ஏற்றம் ஏற்பட்டதால், இதன் விலையை ஒழுங்குமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

மத்திய அரசுக்கு கிடைத்தத் தகவலின் படி, தற்போது விநியோகஸ்தர் அளவிலான விலையில் இருந்து 198 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் நலன் கருதி, மருந்து விலை கட்டுப்பாடு சட்டம் 2013இன் 19ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு விநியோகஸ்தர் அளவிலான விலையின் மீது 70 சதவீதம் வரை வர்த்தக உச்ச வரம்பு விலையை, தேசிய மருந்து விலை ஆணையம் (National Pharmaceutical Pricing Authority) நிர்ணயித்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில், புற்று நோய்த் தடுப்பு மருந்துகள் மீதான வர்த்தக விலை உச்ச வரம்பை வெற்றிகரமாக நிர்ணயம் செய்தது. அறிவிக்கப்பட்ட வர்த்தக விலை உச்சவரம்பின் அடிப்படையில், மாற்றியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என, என்பிபிஏ அறிவுறுத்தியுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை, என்பிபிஏ ஒரு வாரத்துக்குள் பொதுவில் அறிவிக்கும். சில்லரை விற்பனையாளர்கள், டீலர்கள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை விலைப் பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும். வர்த்தக விலை உச்சவரம்பு நிர்ணயம் செய்தபின், அதைப் பின்பற்றாத உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் கூடுதலாக வசூலித்தப் பணத்தை 15 சதவீத வட்டி மற்றும் 100 சதவீத அபராதத்தை மருந்து விலை கட்டுப்பாடு விதிமுறை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டும்.

கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க, மாற்றியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட ஆக்சிஜன் செறிவூட்டிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா என்பதை மாநில மருந்து விலை கட்டுப்பாட்டாளர்கள் கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவு நடப்பாண்டு நவம்பர் 30ம் தேதி வரை பொருந்தும். மறுபரிசீலனைக்கு உட்பட்டது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details