கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், நாக்பூரில் வசிக்கும் சதீஷ் என்ற 39 வயது நபர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பழம் வழங்கியுள்ளார். பின்னர், சிறுமியின் ஆடையைக் கழற்ற முயற்சித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அப்போது, அங்கு வந்த சிறுமியின் தாயார் அவரைக் காப்பாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமி, சிறுமியின் தாயார், பக்கத்து வீட்டுக்காரர் உள்பட ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் 354, 363 (கடத்தல்), 342 (தவறாக நடந்து கொள்ளுதல்), போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் சதீஷூக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சதீஷ் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை, சிறாரின் ஆடையைக் கழற்றாமல் மார்பைத் தொடுவது போக்சோ சட்டத்தின் படி பாலியல் வன்முறை அல்ல என தெரிவித்துள்ளது. நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த தீர்ப்பை ஜனவரி 19ஆம் தேதி வழங்கியுள்ளார். பொதுவெளியில் இன்று வெளியிடப்பட்ட அந்த தீர்ப்பில், பாலியல் உள்நோக்கத்துடன் ஆடையைக் கழற்றி மார்பைத் தொடுவதுதான் பாலியல் துன்புறுத்தல் என குறிப்பிடப்பட்டுள்ளது.