டெல்லி: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மோட்டேரா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
63 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1.10 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வண்ணம், நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான இந்த மோட்டேரா மைதானத்தில், ஒலிம்பிக் நிலை நீச்சல் குளம், உட்புற அகாதெமி, விளையாட்டு வீரர்களுக்கான நான்கு உடை மாற்றும் அறைகள், 11 பிட்சுகள்., உணவு அரங்குகள், ஜி.சி.ஏ கிளப் ஹவுஸ், தனித்தனி அதிநவீன ஜிம்கள், வீரர்கள் மற்றும் விஐபி நுழைவாயிலுக்கு அருகில் ஒரு சிறப்பு லவுஞ்ச் ஆகியவை உள்ளன.
அரங்கத்தில் மொத்தம் 11 களிமண் பிட்ச்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. பிரதான மற்றும் பயிற்சி பிட்ச்களுக்கு செம்மண், களிமண் என இரண்டையும் பயன்படுத்திய முதல் அரங்கம் இது. இங்கு மழை பெய்தால் கூட 30 நிமிடங்களில் உலர வைக்கும் வகையில் மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.