டெல்லி:வீர தீர துணிச்சலான செயல்பாடுகளுக்காக இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 23) நடைபெற்றது.
கல்வான் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு விருது
கடந்தாண்டு கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், 'ஆப்ரேஷன் ஸ்னோ லியோபேர்ட்' (Operation Snow Leopard) தாக்குதலில் சீன ராணுவத்தை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த கர்னல் பிக்குமாலா சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா அறிவிக்கப்பட்டது.
சந்தோஷ் பாபுவின் தாயாரும், மனைவியும் சேர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து மகாவீர் சக்ரா விருதைப் பெற்றனர். மேலும், இந்த விழாவில் நைப் சுபேதார் நுதுராம் சோரன், ஹவில்தார் கே. பழனி, நாயக் தீபக் சிங், சிபாய் குர்தேஜ் சிங் ஆகிய மறைந்த படைவீரர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவரிடமிருந்து வீர் சக்ரா விருது பெறும் ஹவில்தர் கே. பழனியின் மனைவி இவர்கள் அனைவரும் சீன ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கில்(Galwan Valley clash) நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்கள். இதில், ஹவில்தார் கே. பழனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். பழனிக்கு அறிவிக்கப்பட்ட வீர் சக்ரா விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.
பரம்வீர் சக்ரா - மகாவீர் சக்ரா - வீர் சக்ரா
போர் காலங்களில் இந்தியப் படையினரின் வீரதீரச் செயலுக்கும், தியாகத்திற்கும் பரம்வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. போர் - போர் அல்லாத காலங்களில் எதிரிகளின் முன்னிலையில் படையினர் செய்த வீரதீரச் செயலுக்காக மகாவீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. போர் அல்லாத அமைதி காலங்களில் இந்தியப் படையினரின் வீரதீரச் செயலுக்கும், தியாகத்திற்கும் வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: Vir Chakra for Abhinandan: வீர் சக்ரா விருதுபெற்றார் போர் வீரர் அபிநந்தன்!