டெல்லி:நாடு முழுவதும் இன்று (செப். 10) விநாயக சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மூன்று அடிக்கு மிகாமல் உள்ள விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வீட்டிலேயே வழிபட வேண்டும் என்றும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவோ கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அதன்படி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி தங்களது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "கணபதி பாப்பா மோர்யா. நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். இந்நாளில் கரோனா தொற்றுக்கு எதிரான நமது முயற்சிகள் வெற்றிபெற வேண்டும். நம்மிடையே மகிழ்ச்சி, அமைதி நிலவ வேண்டும் என்று விநாயகரிடம் வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இந்த சுபநிகழ்ச்சி நாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் வரட்டும். கணபதி பப்பா மோர்யா" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தி - பாதுகாப்பு பணியில் 20, 000 போலீசார்