டெல்லி: கடந்த டிசம்பர் 3 அன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 10வது நாளான டிசம்பர் 13 அன்று, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறிய சம்பவங்கள் அரங்கேறின. இந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் எதிர்கட்சி எம்பிக்களின் கடும் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், இதுவரை 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்றும் (டிச.20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று நாடாளுமன்றத்தில், துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் போன்று, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி நடித்துக் காண்பித்தார்.
அது மட்டுமல்லாமல், இதனை காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி மொபைல் போனில் வீடியோ எடுத்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட X பதிவில், “நாடாளுமன்ற வளாகத்தில் மதிப்புமிக்க துணை குடியரசுத் தலைவர் நடத்தப்பட்ட விதம் வருத்தம் அளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (எம்பிக்கள்) சுதந்திரமாக தங்களது செயல்பாட்டை பதிவு செய்யலாம். ஆனால், அத்தகைய அவர்களது வெளிப்பாடு கண்ணியத்துடனும், மரியாதையுடனும் இருத்தல் வேண்டும். இதனையே நாடாளுமன்ற கலாச்சாரம் பெருமை கொள்ளும் விதமாக, நாட்டின் மக்களும் எதிர்பார்க்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.