டெல்லி : இந்திய அரசியலமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார வல்லுநர், சட்ட நிபுணர் என பன்முகத் தன்மை கொண்ட பீமாராவ் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தன் ட்விட்டர் பக்கத்தில், இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாபா சாகேப் பீமா ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து குடி மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட் செய்து உள்ளார்.
அறிவு மற்றும் மேதைத்துவத்தின் அடையாளமாக விளங்கும் அம்பேத்கர், கல்வியாளர், சட்ட நிபுணர், பொருளாதார வல்லுநர், அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி, தேச நலன் காக்க கல்வியை பரப்பும் குணம் கொண்டவர், சாதகமற்ற சூழலிலும் நாட்டுக்காக உழைக்கும் எண்ணம் உடையவர் உள்ளிட்ட பன்முகத் திறன்களை கொண்டு இருந்ததாக குடியரசு தலைவர் பதிவிட்டு உள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்தின் உச்சிக்கு கொண்டு வருவதற்கான போராட்டம், அவர்களுக்கு கல்வி உள்ளிட்டவைகளை வழங்குவதையே அம்பேத்கர் தன் வாழ்நாள் மந்திரமாக கொண்டு இருந்தார் என்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக, பொருளாதார சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியா ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதில் அம்பேத்கர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இருந்ததாக தன் ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்து உள்ளார்.