அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலம் கோலாகாட் மாவட்டம் பலிஜன் நகரில் இருந்த குழு ஒன்று, சுற்றுலா செல்வதற்காக கர்பந்தாவில் இருந்து புறப்பட்டுள்ளது. அதிகாலையில் சுற்றுலாப் பேருந்து திலிங்க மந்திர் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே சென்ற லாரியுடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக விபத்து குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, பேருந்தில் இருந்த அனைவரையும் மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் காவல்துறை மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை மற்றும் மீட்புப் படையினர், பேருந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரது X பக்கத்தில் பதிவிட்டதாவது, "கோல்காட் பகுதியில் ஏற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் விபத்து செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. விபத்தில் சிக்கிய அனைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் அவர்கள் அனைவரும் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
இந்த கோர சம்பவம் குறித்து பிரதமர் மோடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்து ஆறுதல் தெரிவித்து, அவரது X பக்கத்தில் வெளியிட்டதாவது, "அஸ்ஸாம் பேருந்து விபத்து செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள், குணமடைந்து விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.