நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் 1ஆம் தேதிமுதல் தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் பாதிப்புகொண்ட 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மார்ச் ஒன்றாம் தேதி காலையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், அடுத்தடுத்துப் பல்வேறு தலைவர்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராணுவ மருத்துவமனையில் முதல் தடுப்பூசி டோஸை செலுத்திக்கொண்டார். உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை இந்தியா செயல்படுத்திவருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கோவிட்-19 நிலவரம்: நாட்டில் புதிதாக 14,989 பேருக்கு பாதிப்பு