டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்வு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்து உள்ளார்.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடர்களுக்கு இடையே பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார். நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படவில்லை உள்ளிட்ட காரணங்களை மேற்கொள்காட்டி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தன.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததை வரவேற்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்து உள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது முழு நாட்டிற்கும் பெருமை மட்டும் மகிழ்ச்சியான விஷயம் என குடியரசுத் தலைவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுத வேண்டிய நிகழ்வு என அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற திறப்பு குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எழுதிய கடிதத்தை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹர்வினாஷ் வாசித்தார். அதில், புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாகவும், இந்திய நாட்டின் ஜனநாயக பயணத்தில் முக்கிய மைல்கல் என்றும் குடியரசு தலைவர் குறிப்பிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.