டெல்லி: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சில மாதங்களுக்கு முன் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்.
இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக அணிக்கு எதிராக பெரும் வெற்றியை அந்த இரண்டு கட்சிகளும் பெற்றன. அதன்பின் அவர்ஐ-பேக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்
பிகே எஃபக்ட்
உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், இமாச்சல பிரேதசம், கோவா, மணிப்பூர் என பாஜக ஆளும் மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாபிலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிரான அணியை வலுப்படுத்தும் நோக்கில் பிராசந்த் கிஷார் செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதை உறுதிசெய்யும் வகையில், சமீபத்தில் அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் என பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியதும், அந்த சந்திப்பிற்கு பிறகு சரத் பவார் தலைமையில் பாஜக கூட்டணி அல்லாத கட்சியினருக்கான டெல்லியில் நடைபெற்ற கூட்டமும் தேசிய அரசியலில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.