பாட்னா: பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று (மே5) பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “காந்தி ஜெயந்தி (அக்.2) தினத்தில் காந்தி ஆசிரமத்தில் இருந்து பாத யாத்திரை தொடங்கப்படும்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “அடுத்த 3 முதல் 4 மாதங்களில், 'ஜன் சூராஜ்' (நல்ல நிர்வாகம்) என்ற எண்ணத்தை வலியுறுத்தி, பிகாரின் முக்கிய நபர்களை நான் சந்திப்பேன். அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஆசிரமம், மேற்கு சம்பாரண் என்ற இடத்திலிருந்து பிகார் முழுவதும் 3,000 கிமீ 'பாதயாத்திரை' மேற்கொள்கிறேன்” என்றார்.
பின்னர் காங்கிரஸ் குறித்து தெரிவிக்கையில், “காங்கிரஸ் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும், நான் அல்ல. அவர்கள் முக்கியமானதாக கருதும் எந்த முடிவையும் அவர்கள் எடுத்தார்கள், நானும் அப்படித்தான். காங்கிரசுக்கு பிரசாந்த் கிஷோர் தேவையில்லை, கட்சிக்கு இன்னும் திறமையானவர்கள் உள்ளனர். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றார்.