கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரசன்ன குமார் மோட்டுபள்ளியை மத்திய அரசு நியமித்துள்ளது. முன்னதாக, என்எல்சி தலைவராக பணியாற்றி வந்த ராகேஷ்குமார் கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் என்எல்சியின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநராக பணியாற்றி வரும் மோகன் ரெட்டிக்கு தலைவராக செயல்பட கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில், ஜனவரி 3ஆம் தேதி மோகன்ரெட்டி என்எல்சி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனிடையே மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம் தரப்பில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரசன்ன குமார் மோட்டுபள்ளியை நியமிக்க அமைச்சரவையில் ஒப்புதல் கோரியது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக எம். பிரசன்ன குமார் நேற்று (ஜனவரி 5) நியமனம் செய்யப்பட்டார்.
பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரத் துறையில் அனுபவம் பெற்றவர். குஜராத் மாநில மின்சாரத் துறையின் நிர்வாக இயக்குநராக 2020ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவருகிறார். இதற்கு முன்பு தேசிய அனல் மின் கழகத்தின் செயல் இயக்குநராக பணியாற்றிவந்தார். இதனிடையே 2021-22ஆம் ஆண்டில் ஏழு மேற்கு மாநிலங்களுக்கான மேற்கு பிராந்திய எரிசக்தி குழுவின் தலைவர் பொறுப்பையும் வகித்தார். இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். நாகார்ஜூனா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியர் பயின்று அதில் தங்கப் பதக்கம் பெற்றார்.