ஹைதராபாத்: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
இந்த சந்திரயான் 3 விண்கலம், திட்டமிட்டபடி அதன் பயணத்தை தொடர்ந்து வருவதாகவும், நாளை (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில், விண்கலம் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை இந்தியா மட்டுமின்றி, உலகமே உற்று நோக்கி கவனித்து வருகின்றது.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 20) நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ‘X' வலைதளப் பக்கத்தில், “விக்ரம் லேண்டரில் இருந்து பெறப்பட்ட முதல் புகைப்படம்” என பதிவிட்டு இருந்தார். அது மட்டுமல்லாமல், அதில் ஒருவர் டீ ஆற்றுவது போன்ற கேலிச் சித்திரத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், இதற்கு நெட்டிசன்கள் மட்டுமின்றி, அரசியல் பிரமுகர்களும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு வலுத்திருக்கும் நிலையில், பிரகாஷ்ராஜ் இன்று (ஆகஸ்ட் 21) இதற்கு விளக்கும் அளிக்கும் விதமாக ஒரு பதிவை தனது ‘X' வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், “வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கும். நான் ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவையைப் பகிர்ந்து இருந்தேன். இது கேரளா சாய்வாலாவைக் (கேரளா டீக்கடைக்காரர்கள்) கொண்டாடும் விதத்திலானது. எந்த டீக்கடைக்காரர்களை ட்ரோல் செய்பவர்கள் (trolls) பார்த்தார்கள்? உங்களுக்கு அந்த நகைச்சுவை புரியவில்லை என்றால், நீங்கள்தான் அந்த நகைச்சுவை.” என தெரிவித்து உள்ளார்.
மேலும், மற்றுமொறு பதிவில், “ஒரே ஒரு சாய்வாலாவை மட்டுமே அறிந்த அனைத்து Unacedemy ட்ரோல்களுக்கும், godimedia-க்கும் பெருமையுடன் வழங்குகிறோம். 1960களில் இருந்து எங்களது சொந்த உந்துதல் மலையாளி சாய்வாலா.. நீங்கள் அறிவைப் பெற விரும்பினால் இதனை படிக்கவும்” என ஒரு வலைதள இணைப்பையும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வலைதள இணைப்பின் அடிப்படையில், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவை அடைந்தபோது, அங்கு ஒரு மலையாளி சாய்வாலா ஏற்கனவே வேற்றுகிரகவாசிகளுக்கு தென்னிந்திய உணவுகளை அளிப்பதற்காக ஒரு கடை அமைத்து இருந்தார். அப்போது, அமெரிக்கா தனது பனிப்போர் போட்டியாளரை முறியடிப்பதற்காக, தானே நிலவில் கால் வைத்த முதல் மனிதன் என கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு மலையாளி சாய்வாலாவான ராஜேந்திர கிருஷ்ணன் மேனன் என்பவர் ஒப்புக் கொண்டு உள்ளார். இதன் பிறகு, நீல் ஆம்ஸ்ட்ராங் மீண்டும் தனது பழைய நண்பர் உடன் நிலவிற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டபோது, சர்தார் தாபாவை (சாலையோர உணவகம்) மட்டுமே பார்த்து உள்ளார். அப்போது, தனது மலையாள நண்பர் புளூட்டோவுக்கு இடம் பெயர்ந்து விட்டதாகவும், அதற்கு அவருடைய உணவின் பிரபலமே காரணம் எனவும் சர்தார் ஆம்ஸ்ட்ராங்கிடம் கூறியுள்ளதாக கதை அமைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி கர்நாடக மாநிலம் பனாஹத்தி பகுதியைச் சேர்ந்த சிவானந்தா கெய்க்வாடா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாகவும் , எதிராகவும் பல்வேறு தரப்பினரும் ட்விட்டரில் களமாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் காண இஸ்ரோ சிறப்பு ஏற்பாடு!