டெல்லி:உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இன்று (ஆகஸ்ட் 31) பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “இன்று எண் 7 லோக் கல்யாண் மார்க்கில் மிகவும் சிறப்பான பார்வையாளர்கள் இருந்தனர். பிரக்ஞானந்தாவை அவரது குடும்பத்தாருடன் நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நீங்கள் (பிரக்ஞானந்தா) ஆர்வத்தையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். உங்களைப் போன்ற உதாரணம், இந்திய இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்” என பதிவிட்டு உள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பாக பிரக்ஞானந்தா வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தது பெருமையாக இருந்தது. என்னையும், என் பெற்றோரையும் ஊக்கப்படுத்தும் உங்களது அனைத்து வார்த்தைகளுக்கும் நன்றி. உங்களுடன் நிகழ்ந்த இந்த உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது” என தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 30) சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பிரக்ஞானந்தாவிற்கு அரசு சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரக்ஞானந்தா தனது குடும்பத்தாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.