டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட தலைமைச் செயலக காவலர் பணிக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிட்டதாகவும், இதில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சிறப்பு நடவடிக்கை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கில் முக்கிய திருப்பமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் அரசுத் தேர்வுகள் ஆணையத்தில், கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த பிரதீப் பால் என்பவரை சிறப்பு நடவடிக்கை குழு கைது செய்துள்ளது.
கைதான பிரதீப் பால் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் என்றும், அவுட் சோர்சிங் முறையில் உத்தரகாண்ட் அரசுத் தேர்வுகள் ஆணையத்தில் பணியில் சேர்ந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
தலைமைச் செயலக காவலர் தேர்வுக்கான வினாத்தாளை திருடி, அதனை பென்டிரைவில் போட்டு தேர்வர்களுக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. கைதான பிரதீப் பாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அதிவேக வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்... 180 கி.மீ வேகத்தை எட்டி சாதனை...