டெல்லி:வரலாற்றுச்சிறப்புபெற்ற ‘லவ குச ராம் லீலா’ நிகழ்வு டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும். இந்நிலையில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் இம்முறை தசரா பண்டிகையன்று ராவணன், கும்பகர்ணன், மேகநாத் போன்ற உருவ பொம்மைகளை எரிக்கவுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் டெல்லி மக்களிடையே இந்நாள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆயிரக்கணக்கான போன் அழைப்புகள் வந்து குவிவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுவரை மட்டும் ‘ லவ குச ராம் லீலா’ நிகழ்விற்கு 5 லட்சம் பாஸ்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். அவருடன் சேர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் 15 வெவ்வேறு நாடுகளிலிருந்து தூதகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கரோனா பரவலால் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இவ்விழா தற்போது நடக்கவுள்ளது. இந்த ராம் லீலா நிகழ்வைப் பல்வேறு ராம்லீலா கமிட்டிகள் டெல்லியிலுள்ள 600க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்துவர். இதற்கு பெரும் திரளாய் மக்கள் கூட்டம் வருவார்கள்.