பெங்களூரு: கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். நேற்று முன் தினம் (அக்.29) இவர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், கர்நாடக ஆளுநர், கர்நாடக முதலமைச்சர், திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
ரசிகர்களின் கதறல்
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமாரின் நெற்றியில் முத்தமிட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் வந்து புனித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கண்ணீர் மல்க முத்தமிட்ட கர்நாடக முதலமைச்சர் முன்னதாக புனித் ராஜ்குமாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது. அப்போது ஸ்டேடியத்தில் வைப்பதற்காக அவரை எடுத்துச் சென்ற போது சாலையில் இருபுறமும் ரசிகர்கள் குவிந்து நின்ற ரசிகர்கள், “அப்பு எழுந்து வா, மீண்டு வா” என கண்ணீருடன் கதறி அழுதனர். இது காண்போரை நெஞ்சுருக வைத்து கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.
புனித்தின் மகள் த்ரித்தி (Dhriti) அமெரிக்காவிலிருந்து வருவதற்காக அவரது உடல் அடக்கம் செய்யாமல் வைக்கப்பட்டிருந்த நிலையில், த்ரித்தி பெங்களூரு திரும்பிய பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னதாகத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து நேற்று (அக்.30) த்ரித்தி பெங்களூரு வந்தடைந்தார்.
உடல் நல்லடக்கம்
அதனையடுத்து நேற்று மாலை அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் மாலை நேரத்தில் சாத்தியம் இல்லாத காரணத்தல் இன்று (அக்.31) நல்லடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, இன்று (அக்.31) ஸ்ரீ கண்டீரவா ஸ்டுடியோவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில், புனித் ராஜ்குமாருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் புனித் குடும்பத்தினரிடம் தேசியக் கொடியை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து புனித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது தாய், தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திலேயே புனித்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்கா: அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்!