டெல்லி:புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த இளம்பெண் அஞ்சலி காரில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஞ்சலியின் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதை, ஓட்டுநர் தீபக் கண்ணா உணர்ந்து, நண்பர்களிடம் தெரிவித்ததாகவும், மற்றவர்கள் அதை அஜாக்கிரதையாக செயல்பட்டு தீபக் கண்ணாவை காரை செலுத்துமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட 5 நபர்களில், ஒருவர் பாரதிய ஜனதா கட்சியுடன் சுமூக உறவு கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், காரில் இளம் பெண் அஞ்சலி சிக்கி 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதை தான் உணரவில்லை என ஓட்டுநர் தீபக் கண்ணா தெரிவித்துள்ளார்.
அதிகாலை 2 மணி அளவில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அஞ்சலியுடன் மற்றொரு பெண்ணும் இரு சக்கர வாகனத்தில் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அஞ்சலியுடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் நிதி என சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அஞ்சலி பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளரிடம் விசாரித்தபோது, சம்பவம் நடந்த அன்றிரவு, நிதியும், அஞ்சலியும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டதாக மேலாளர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். மேலும் கார் மோதியபோது அஞ்சலி காயங்களுடன் அருகில் விழுந்ததாகவும், அதன் பின் அவர் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.
நிதி குறித்து விசாரணை நடத்தி சம்பவத்தன்று என்ன நடந்தது என அவரிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கஞ்சவாலா அடுத்த ஜோந்தி கிராமம் அருகே யு டெர்ன் எடுக்கும்போது காரில் சிக்கி இருந்த அஞ்சலியின் கையை 5 பேரில் ஒருவர் கண்டதாகவும், அதன்பின் காரில் சிக்கியிருந்த அஞ்சலியின் உடலை பிரித்து, சாலையில் போட்டுவிட்டு அனைவரும் தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் அஞ்சலி இறப்பில் மர்மம் நிலவுவதாக கூறிய அவரது பெற்றோர், அஞ்சலியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.
போலீசாரின் பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவு, போலீசார் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இளம்பெண் அஞ்சலியின் மரணம் நிகழ்ந்து உள்ளதாகவும், 13 கிலோ மீட்டர் தூரம் இளம்பெண்ணின் உடல் இழுத்துச் செல்லப்பட்டு கோரமாக உயிரிழந்ததற்கு காரணமான டெல்லி போலீசார் மீது நடவடிக்கை மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் முன்மாதிரியாக இருக்க வேண்டுமென டெல்லி மகளிர் ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சாலையில் ஆடைகளின்றி உடல் சிதைந்து காணப்பட்ட அஞ்சலியின் சடலம் கைப்பற்றப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இளம்பெண் அஞ்சலியின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.
தலை, முதுகுத் தண்டு, இடது தொடை எலும்பு, இரண்டு கீழ் மூட்டுகளில் ஏற்பட்ட காயம் காரணமாக ரத்தக்கசிவு ஏற்பட்டதே அஞ்சலியின் உயிரிழப்புக்குக் காரணம் எனப் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல் கண்காணிப்பாளர் சாகர் பிரீத் ஹூடா தெரிவித்துள்ளார்.
அனைத்து காயங்களும் விபத்து மற்றும் காரில் உடல் இழுத்துச்செல்லப்பட்டதால் ஏற்பட்டு இருக்கக் கூடும் என்றும், பாலியல் வன்கொடுமைகளுக்கான தடயங்கள் அறிக்கையில் காணப்படவில்லை என்றும் சாகர் பிரீத் ஹூடா கூறியுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இளம்பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனை முடிந்து சொந்த வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலியின் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அஞ்சலியின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஜார்க்கண்டில் குழந்தைகளை கொன்று தின்ற சிறுத்தை - ஹைதராபாத் வேட்டைக்காரரை இறக்கிய அரசு