டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக எம்.பி. ராகேஷ் சின்ஹாவால் "மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா" நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. தம்பதிகள் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றெடுப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது என்றார்.
இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெற்றுக்கொள்ளும் தம்பதிகள், அரசு வேலை, மானியங்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெற முடியாது என இந்த மசோதா கூறுகிறது. இந்த மசோதா பல முறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை நிறைவேறவில்லை.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், மக்கள்தொகையை கட்டுப்படுத்த எந்தவொரு சட்ட நடவடிக்கை குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை எனத்தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்.பி.ரவி கிஷண், 'மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை, தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்ய உள்ளதாக’ தெரிவித்தார்.
இதற்குப்பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத்தெரிவித்திருந்தனர். நான்கு குழந்தைகளுக்கு தந்தையான ரவி கிஷண், மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா குறித்துப்பேசுகிறார் என இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.