புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று (செப்.22) அறிவித்துள்ளது.
அதன்படி புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஐந்து நகராட்சிகள், 10 கொம்யூன் (15 கிராம பஞ்சாயத்துகளை அடக்கியவை) பஞ்சாயத்துக்கான உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல்
இரண்டாம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 7ஆம் தேதி நிறைவடைகிறது.