புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. புதுச்சேரி அரசு, சுகாதாரத்துறை நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி 5,607 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 619 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் இதுவரை 49 ஆயிரத்து 693 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலை கைதிகள் - வார்டன்களுக்கு கரோனா
புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 41 கைதிகள், 3 சிறை வார்டன்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் ஆண்கள், பெண்கள் என 600க்கும் மேற்பட்டோர் கைதிகளாக உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக் கைதி ஒருவருக்கு சிறைச்சாலைக்கு சென்று வந்த பின்பு கரோனா உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து சிறை வளாகத்தில் உள்ள தண்டனை கைதிகள், வார்டுகளுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயுள் தண்டனை கைதிகள் 41 பேர், 3 சிறை வார்டன்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கைதிகளுக்கு சிறை வளாகத்திலேயே தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வார்டன்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.