லம்பெல்பட்: இந்த வாக்குப்பதிவானது இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்னுபூர், சர்சாண்ட்பூர், காங்போக்பி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இதில் கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றியே வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஹெய்ங்காங் தொகுதியின் பாஜக வேட்பாளரும், மணிப்பூர் முதலமைச்சருமான என். பைரேன் சிங் தனது வாக்கினை இம்பாலில் உள்ள ஸ்ரீவன் உயர்நிலைப் பள்ளியில் செலுத்தினார்.
38இல் 30-ஐ பாஜக கைப்பற்றும் - பைரேன் சிங்
அப்போது அவர் பேசுகையில், "எனது சட்டப்பேரவைத் தொகுதியில் 75 விழுக்காடு வாக்காளர்கள் எனக்கும், பாஜகவுக்கும் வாக்களிப்பர். முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 38 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் வெல்லும். மணிப்பூர் மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை விரும்புகிறார்கள்" என்றார்.
இந்தத் தேர்தலில் 12 லட்சத்து ஒன்பதாயிரத்து 439 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள். 15 பெண்கள் உள்பட 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், முதல்கட்ட வாக்குப்பதிவு ஆயிரத்து 721 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறுகிறது.
களத்தில் முக்கிய வேட்பாளர்கள்:
- முதலமைச்சர் என். பைரேன் சிங்
- சட்டப்பேரவைத் தலைவர் ஒய். கெம்சாந்த் சிங்
- துணை முதலமைச்சரும், என்.பி.பி. வேட்பாளருமான யம்நம் ஜோய்குமார்
- மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் என். லோகேஷ் சிங்
முதல்கட்டத் தேர்தல் இம்பால் கிழக்கில் 10, இம்பால் மேற்கில் 13, பிஷ்னுபூர் , சர்சாண்ட்பூரில் தலா 6, கங்போக்பியில் 3 என மொத்தம் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
மார்ச் 10 அனைத்திற்கும் முடிவு
மணிப்பூர் தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், களத்தில் உள்ள 173 வேட்பாளர்களில் 39 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றார். தேர்தல் பணியில் ஆறாயிரத்து 884 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் அனைவரும் வெப்பநிலை சோதனைக்குப் பின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை 4 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. கரோனா தொற்றாளர்கள் மாலை 3 முதல் 4 மணிவரை வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்று 38 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு மார்ச் 5இல் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன.
இம்முறை தெளிவுபெறுமா காங்கிரஸ்?
தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு 2017இல் பாரதிய ஜனதா கட்சி மணிப்பூரில் ஆட்சிமைத்தது. இருப்பினும் பாஜக இம்முறை அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களம் காண்கிறது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் பிளாக், ஆர்.எஸ்.பி., ஜனதா தளம் (மதச்சார்பற்ற) ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் இத்தேர்தலில் கூட்டணி வைத்துள்ளது.
2017 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது என்பது கவனிக்கத்தக்கது; ஆனால் நடந்த கதை வேறு!
இதையும் படிங்க: ஆலகால விஷம் உண்டு உலகைக் காத்த சிவனின் மகா சிவராத்திரி!