டெல்லி:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கிய மத்திய அரசு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்திருந்தது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
20க்கும் மேற்பட்ட இந்த வழக்குகளை ஒரே வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள், சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரிக்கத் துவங்கியது.
இந்த வழக்கின் விசாரணை 16 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்று (டிச.11) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும் எனவும், அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனவும் லடாக் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஜா ஹரி சிங்கின் மகனுமான கரன் சிங், “நான் அதை வரவேற்கிறேன். என்ன நடந்திருந்தாலும் அது இப்போது அரசியல் சாசன படி செல்லுபடி ஆகும் என உறுதியாகிவிட்டது. விரைவில் மாநில அந்தஸ்தை மீட்க வேண்டும் என நான் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கிறேன்.
காஷ்மீரில் ஒரு பிரிவினர் இந்த தீர்ப்பில் மகிழ்ச்சியடையாமல் உள்ளனர். தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள் என்பது தான் அவர்களுக்கு நான் கூறும் ஆலோசனை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் போராட்டம் இனி தேர்தலை நோக்கியதாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (Democratic Progressive Azad Party) தலைவர் குலாம் நபி ஆசாத், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த தீர்ப்பினால் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் ஜே&கே என்சி கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, “ஏமாற்றம் தான் ஆனால் நாங்கள் மனம் தளரவில்லை. இந்த நிலைக்கு வருவதற்கு பாஜகவிற்கு நீண்ட காலமானது. நாங்களும் நீண்ட கடினமான பயணத்திற்குத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.