கர்நாடகா: 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று(மே.10) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்களித்து வருகின்றனர்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, ஷிவமோகா தொகுதியில் உள்ள அதாலித்த சவுதா மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “மக்கள் அனைவரும் விரைவாக சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று 100 சதவீதம் நம்புகிறேன். 75 முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பாஜகவை ஆதரிப்பார்கள். நாங்கள் 130 முதல் 135 இடங்களில் வெற்றி பெறுவோம். பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்" என்று கூறினார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூர் சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களித்ததாக தெரிவித்தார். முன்னதாக இன்று காலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “காலை வணக்கம் கர்நாடகா. நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிரானவன். 40 சதவீத ஊழல் அரசுக்கு எதிராக வாக்களிக்கிறேன். நீங்களும் கர்நாடகாவை காப்பாற்ற மனசாட்சியுடன் வாக்களியுங்கள்" என பதிவிட்டிருந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஷிகான் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைப்பேன். கர்நாடக மக்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக வாக்களிப்பார்கள். பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்கும்" என்று கூறினார்.
அதேபோல் தனது வாக்கை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், “இன்று இளம் வாக்காளர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள். மாநிலத்தில் உள்ள விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் பற்றி அவர்களுக்கு தெரியும். நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் மாற்றத்திற்காக எங்களுக்கு வாக்களிப்பாளர்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் 141 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
அதேபோல், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக அமைச்சர் நாராயண கவுடா, கன்னட நடிகர் கணேஷ், கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, 8.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: Karnataka Election : கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது