குல்காம்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கைமோவில் நேற்று (ஆக. 13) பயங்கரவாதிகள் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தினர். இந்த கையெறி குண்டுத் தாக்குதலில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில், உயிரிழந்த காவலர் பூஞ்ச் மெந்தரைச் சேர்ந்த தாஹிர் கான் என்று உறுதியாகியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த தாஹிர் கான், முதலில் சிகிச்சைக்காக அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து காஷ்மீர் மண்டல காவல் துறை, அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,“குல்காமின் கைமோவில் நேற்று இரவு கைக்குண்டு தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த பயங்கரவாத சம்பவத்தில் பூஞ்ச் மெந்தரில் வசிக்கும் தாஹிர் கான் என்ற காவலர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆனந்த்நாக் ஜிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார்" என்று என பதிவிட்டுள்ளது.