காசியாபாத் (உத்தரப்பிரதேசம்):முதியவர் தாக்கப்பட்டது தொடர்பாகப் பரவிய காணொலிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ஆஜராக ட்விட்டர் முன்னாள் அலுவலர் உள்பட ஐந்து பேருக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக இந்த வழக்குத் தொடர்பாக காசியாபாத் காவல்துறைகர்நாடக மாநிலத் தலைநகர், பெங்களூருவில் வசிக்கும் ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஷ்வரிக்கு ஜூன் 21ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
அதில் லோனி பார்டர் காவல் நிலையத்திற்கு ஜூன் 24ஆம் தேதிக்குள் சென்று புகார் குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அவர் காவல் நிலையம் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூன் 15ஆம் தேதியே ட்விட்டர் இன்க், ட்விட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா, தி வயர் பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர் மற்றும் ராணா அயூப், காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் நிஜாமி, மஸ்கூர் உஸ்மானி, ஷாமா முகமது மற்றும் எழுத்தாளர் சபா நக்வி ஆகியோர் மீது காசியாபாத் காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.