லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்காக கட்டாயமாக மதம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், லவ் ஜிகாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டாய மதமாற்ற எதிர்ப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் தனது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தனது பால்ய கால தோழியை (இந்து மதத்தைச் சார்ந்த) இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் திருமணம் செய்யவிருந்தார். இவர்களது திருமணமானது முதலில் இந்து முறைப்படியும், பின்னர் இஸ்லாமிய முறைப்படியும் நடைபெறவிருந்தது. இவர்களுக்கான திருமண நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் திருமணத்தை சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறி காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கைகளால், திருமண நிகழ்ச்சியில் குழப்பங்கள் சூழ்ந்தது மட்டுமின்றி, அனைவருக்கும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சி குறித்து இந்து மகாசபா மாவட்டத் தலைவர் பிரிஜேஷ் சுக்லா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இவரது புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மணப்பெண்ணின் உறவினர் ஒருவர் பேசுகையில், "காவல் துறையின் இந்த நடவடிக்கையால் இருவீட்டில் உள்ளோரும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளோம். திருமண விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு சமைத்து வைத்துள்ள உணவுப் பொருள்களைக்கூட கொடுக்கமுடியாத நிலைக்கு காவல் துறையினர் எங்களை தள்ளியுள்ளனர். இதுபோன்ற ஒரு சம்பவம் சுதந்திர இந்தியாவில் நடைபெறும் என்று இதுவரை நான் கற்பனைக்கூட செய்ததில்லை" என்கிறார் வருத்தத்துடன்.
காவல் துறையினரின் நடவடிக்கை குறித்து பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இஸ்லாமிய ஆன்மிகத் தலைவர், "நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகளவு அச்சுறுத்தல் புதிய சட்டத்தால் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் வாயிலாக உத்தரப் பிரதேசத்தை காவல் துறையினர்தான் ஆட்சி செய்கின்றனர்" எனக் கூறியுள்ளார்.
இந்த திருமண நிகழ்வு குறித்து இருவீட்டாரின் மீதும், கட்டாய மதமாற்ற சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.