மீரட்: உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, அவரது நண்பர்கள் அடித்து, முகத்தில் சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாகவும், அது தொடர்பாக வீடியோவை நவ.13ம் தேதி ஆன்லைனில் பதிவேற்றியுள்ளதாகவும் இளைஞரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பான முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மெடிக்கல் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தீபாவளிக்குப் பிறகு விருந்து கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சௌத்ரி சரண் பல்கலைக்கழகத்தைச் (Chaudhary Charan University) சேர்ந்த சில பெண்கள் குறித்து தவறாக பேசியது தொடர்பாக தனது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனால் தனது மகனை, அவரது நண்பர்கள் அடித்து உதைத்து, முகத்தில் சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக இளைஞரின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக எஸ்.பி பியூஸ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
அந்த விசாரணையில், விருந்து முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது, இளைஞர் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டு, பின்னர் ஜாக்ரிதி விஹார் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவர்களில் ஒருவர் இளைஞர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாகவும், ஒருவர் அந்த சம்பவத்தை அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இளைஞரின் தந்தை கூறியதாவது, "அந்த வீடியோவில் எனது மகன் அவரது நண்பர்களின் கால்களில் விழுந்து பலமுறை கெஞ்சியுள்ளார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எனது மகனை விடவில்லை. மேலும் அந்த வீடியோவை வைத்து தொடர்ந்து மிரட்டியதால், இதுதொடர்பாக எங்களது மகன் குடும்பத்தில் கூறினார்" என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மெடிக்கல் காவல் நிலையத்தில் இளைஞரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த நவ.16ஆம் தேதி ஜெயில் சுங்கி பகுதியில் வசிக்கும் அவி ஷர்மா, அஜந்தா காலனி பகுதியில் வசிக்கும் ஆஷிஷ் மாலிக், சோம்தட் ஜாக்ரிதி பகுதியில் வசிக்கும் ராஜன் மற்றும் சோம்தத் விஹாரைச் சேர்ந்த மோஹித் தாக்கூர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஆஷிஷ் மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நபர்களை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஆவின் பால் விவகாரத்தில் அரசு திணறல்; அமைச்சருக்கே சிறையில் சரியான உணவு இல்லை" - தமிழக அரசை விளாசிய வானதி சீனிவாசன்!