ஹைதராபாத்: 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி காங்கிரஸ் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக சுனில் கனுகோலு நியமிக்கப்பட்டார். காங்கிரஸின் 2024 தேர்தலுக்கான பணிக்குழுவில் சுனில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று(டிச.13) தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் உள்ள தேர்தல் வியூக வகுப்பாளர் சுனிலின் "மைண்ட் ஷேர் அனலடிக்ஸ்" அலுவலகத்தில் போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுனில் குழு வைத்திருக்கும் சமூக வலைதளப் பக்கங்களை போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை திட்டமிட்ட சதி என்றும், இதில் தங்களது முக்கிய தகவல்கள் திருடப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.