மும்பை: அன்னபூரணி திரைப்படத்தின் கதையானது, பிராமணர் சமூகத்தை சேர்ந்த பெண்ணான அன்னபூரணி (நயன்தாரா) மிகப்பெரிய செஃப் (Chef) ஆக வேண்டும் என்ற ஆசையில், வீட்டை விட்டு வெளியேறி தனது லட்சியத்தை அடையப் போராடுகிறார்.அதன் தொடர்ச்சியாக, ஒரு ஹோட்டல் மேனேஜ்மண்ட் கல்லூரியில் சேர்ந்து தனது ஆசைப் பயணத்தை துவங்குகிறார். அந்த பயணத்தில் அவர் வெற்றி அடைந்தார? இல்லையா? என்பது தான் மீதி கதை.
இப்படத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்த அன்னபூரணி அசைவ உணவுகளை சமைப்பது மற்றும் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததை அடுத்து, அன்னபூரணி திரைப்படம் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக கதையம்சம் கொண்டுள்ளதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு காட்சியில், நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக, ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று நாயகன் ஃபர்ஹான் (ஜெய்) கூறுவார். இந்த காட்சிக்கு கடும் சர்ச்சைகள் கிளம்பின. அந்த வகையில், இந்து அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் சோலங்கி என்பவர் இப்படம் மத உணர்வை புண்படுத்தும் வகையிலும், லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.