புதுச்சேரி சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சேதராப்பட்டு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, கரசூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.
சேதராப்பட்டு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சேதராப்பட்டு உதவி ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவல் துறையினர், மார்ச் 22 சேதராப்பட்டு ஏரிக்கரையில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
கஞ்சா விற்ற இளைஞர் கைது :அப்போது, அய்யனார் கோயில் அருகே வட மாநில இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தார். சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரது உடைமைகளை சோதித்தனர்.
அப்போது அவரது ஃபேண்ட் பாக்கெட்டில் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் ஹஜிப்பூர் பகுதியைச் சேர்ந்த சோமநாத் (32) என்பதும், திருமணமாகி மனைவியுடன் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
கஞ்சா பறிமுதல் : சோம்நாத் வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அங்கு வீட்டுக்குள் அறையில் வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர். கர்ப்பிணியான சோமநாத் மனைவியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா பொட்டலங்களை கிலோ கணக்கில் கடத்தி வந்து 10 கிராம் அளவிற்கு பாக்கெட்டுகளில் அடைத்து அதை ஒரு பொட்டலம் 500 ரூபாக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
சேதராப்பட்டில் வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாது திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, ஆரோவில் பகுதியிலுள்ள உள்ளூர் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் கஞ்சாவை சோம்நாத் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சோம்நாத்தை கைது செய்த காவல் துறையினர், அவர் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய இரண்டரை (2 ½) கிலோ கஞ்சா, 10 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம், 2 செஃல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன்: ஆந்திராவில் காவல் துறையினரால் மீட்பு