புதுச்சேரி: மாநிலத்தின் 15ஆவது சட்டபேரவைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று, பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது,
தியாகராஜன், திமுக உறுப்பினர்: ''விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் இடுபொருள் தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகையும் வழங்கப்பட வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
காரைக்கால் பகுதியில் சுழற்சி முறையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனைகளை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு வர 150 கி.மீ., தொலைவில் இருக்கிறது. சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி காரைக்காலில் இல்லை. ஆம்புலன்ஸ் மிக மோசமாக உள்ளது. அதாவது 5 ஆம்புலன்ஸ்கள் வழங்க வேண்டும்.
காரைக்கால் பகுதியில் மக்கள் மருத்துவ சேவைகளுக்காக புதுச்சேரிக்கு சென்ற காலம் போக, தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திற்குச் செல்கிறார்கள்.
காரைக்காலில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனை பணிகளை வேகப்படுத்த வேண்டும். இங்கிருக்கும் தொழிற்சாலைகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு 70 விழுக்காடு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 30 விழுக்காடு வேலைகளை பிற மாநிலத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
கல்யாணசுந்தரம், பாஜக உறுப்பினர்:காவல் நிலையங்களில், நீண்ட நாட்களாக காவலர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளனர். இதில் குற்றம் செய்பவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். அதனால் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு காலவர்களை இடமாற்றம் செய்யவேண்டும்.
காலப்பட்டு பகுதியில் உள்ள மருத்துவமனை ஹாசன் கம்பெனி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. ப்ளஸ் 1 படிக்கும் சிறுவர்கள் கூட கஞ்சா பயன்படுத்துகிறார்கள். இதனால் குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.