உத்தரகாண்ட்:உத்தரகாசி மாவட்டம் புரோலாவில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள குமோலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் 8 கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மிஷினும் அடித்துச் செல்லப்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
உத்தரகாசியின் புரோலா பகுதியில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 10)இரவு பலத்த மழை பெய்தது. இதனால் குமோலா ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனால் குமோலா சாலையில் அமைந்துள்ள இரண்டு நகைக்கடைகள் உட்பட 8 கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுமட்டுமின்றி இங்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் ஒன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இது குறித்து, பஞ்சாப் வங்கியின் கிளை மேலாளர் சஞ்சல் ஜோஷி கூறுகையில், இந்த ஏடிஎம்மில் புதன்கிழமை மாலைதான் 24 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், அதிக பணம் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ஏடிஎம்மில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என கூறினார். இந்நிலையில் அங்கிருக்கும் பல குடியிருப்பு வீடுகள் மற்றும் கடைகள் இன்னும் சேதம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலில் உள்ளன.