லடாக்:காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, லடாக் யூனியன் பிரதேசப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தியாவின் நிலப்பரப்பு பகுதிகளில், அண்டை நாடான சீனாவின் ஆக்கிரமிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்திய நாட்டிற்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி, பொய் உரைத்து வருவதாக, ராகுல் காந்தி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாள் விழா, இன்று (ஆகஸ்ட் . 20) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் டிசோ ஏரிப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது, "சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து உள்ள நிலையில், பிரதமர் மோடி, இந்திய நாட்டிற்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்ற மாபெரும் பொய்யை தொடர்ந்து உரைத்து வருகிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் நடைமுறையில் இருந்து வந்த 370வது சட்டப்பிரிவை, 2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியதை அடுத்து, லடாக் பகுதிக்கு, யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. லடாக்கிற்கு யூனியன் அந்தஸ்து வழங்கப்பட்ட நிகழ்வை, அப்பகுதி மக்களே விரும்பவில்லை.