சண்டிகர் (ஹரியானா) : பிரதமர் நரேந்திர மோடி மிகவும் திமிர் பிடித்தவர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் என மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் காணொலி ஒன்றில் பேசியுள்ளார். இது தொடர்பான காணொலிகள் வைரலாகிவருகின்றன.
ஹரியானாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் கலந்துகொண்டார். அப்போது அந்த விழாவில், “விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது பிரதமர் நரேந்திர மோடியிடம் 5 நிமிடங்கள் வாக்குவாதம் செய்தேன்.
விவசாயிகள் போராட்டத்தின்போது 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என நான் கூறியபோது அவர் என்னிடம் திமிர் காட்டினார்.
ஆனாலும் நான் அவரை விடவில்லை, நீங்கள் ராஜாவாக இருப்பதால் அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்றேன். அப்போது அவருடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அவர் என்னை அமித் ஷாவை சந்திக்க கூறினார். நானும் அமித் ஷாவை சந்தித்தேன். அப்போது, விவசாயச் சட்டப் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும், பயிர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் சட்டக் கட்டமைப்பை வழங்கவும் மத்திய அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்” என்றார்.
அதன்பின்னர், விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விவசாயிகள் தங்களுக்குச் சாதகமாக குறைந்தப்பட்ச ஆதார விலை சட்டக் கட்டமைப்பு போன்ற முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார் மாலிக்.
தனது பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொள்வதற்கு பயப்படவில்லை என்று கூறிய மாலிக், "நான் எப்போதும் விவசாயிகளுடன் இருக்கிறேன்" என்றார். சத்ய பால் மாலிக் அவ்வப்போது நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு எதிராக பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாடாளுமன்றத்தை மதிக்காத நரேந்திர மோடி - திருமா விமர்சனம்