இந்தியாவிலேயே முழுமையாக கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டிற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்ததைத் தொடர்ந்து, அந்த விழாவிலேயே கப்பல் படைக்கு புதிய கொடி அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
மராத்திய ராஜ்ஜியத்தை தோன்றுவித்த மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் அரசு முத்திரையின் நினைவாக இந்த புதிய கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி தனது போர்ப்படைகளில் கப்பல் படையையும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 'நிஷான்' (Nishaan) என்று பெயரிடப்பட்ட புதிய கொடி, காலனியாதிக்க நினைவுகளை ஓரங்கட்டி, இந்தியாவின் கடற்படை பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், இந்திய கப்பல் படை கொடியில் செயின்ட் ஜார்ஜ் சிலுவை குறியுடன், இந்திய மூவர்ணக்கொடி இடம்பெற்றிருந்தது. வெள்ளை நிற பின்னணியில், சிவப்பு நிற சிலுவை தான் செயின்ட் ஜார்ஜ் சின்னமாக இருந்தது. சுதந்திரத்திற்கு முன் இந்திய கொடிக்குப் பதிலாக இங்கிலாந்தின் யூனியன் ஜாக் கொடி அதில் இடம்பெற்றிருந்தது.
சுதந்திரத்திற்குப் பின் பலமுறை இந்த இந்திய கப்பல் படையின் கொடி மாற்றப்பட்டது. ஒரே ஒரு முறை, 2001ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் சிலுவை குறி நீக்கப்பட்டு, இந்திய கப்பல் படை முகடு கொடியில் இடம்பெற்றது. பின்னர் மீண்டும் 2004ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் சிலுவை வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக அசோக சின்னமும் வைக்கப்பட்டது.
இந்திய கப்பல் படைக்குத் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கொடியின் இடதுபுறத்தின் மேலே இந்திய மூவர்ணக்கொடி இடம்பெற்றிருக்கும். வலதுபுறத்தில் நீல நிறத்திலான எண்கோண வடிவத்தில் (Octagonal Shape) அசோக சின்னத்துடன் நங்கூரம் இருப்பது போன்ற இலட்சினையும் இடம்பெற்றுள்ளன. அந்த இலச்சினையில் கப்பல் படையின் பொன்மொழியான 'சத்தியமேவ ஜெயதே' எழுதப்பட்டிருக்கும்.